Saturday 18 February 2012

கம்பீர அழகு

அழகு அது எங்கிருந்தாலும் ரசிப்பவன் நான். அதுவும் அது ஒரு பெண்ணிடமென்றால் இயற்கை நியதிப்படி ஒரு ஆணாக அதை அதிகமாகவே ரசிப்பவன். எதை அழகு என்று கொள்கிறேன். வளைவுகளையா, வண்ணங்களையா, குணத்தையா என்று பலமுறை என்னை நானே கேட்டு குழப்பிக்கொண்டிருக்கிறேன்.

வடபழனி முருகனுடன் ஒரு சின்ன சண்டையை முடித்துக்கொண்டு நடந்து வந்து கொண்டிருக்கையில் அந்த பெண்னை பார்த்தேன். ஒரு 30-35 வயது இருக்கும். கோவிலுக்கு போகிறார் என்று நினைக்கிறேன். புடவை கட்டியிருந்த அவரது கழுத்து முழுதும் தீப்புண் வடுக்கள். அதையும் தாண்டி அவரை ரசிக்க வைத்துவிட்டு போனார் அந்த நடுத்தர வயது பெண். அவர் வெளிப்படுத்திய கம்பீரம் அவரை மிகவும் அழகாக காண்பித்தது மட்டும் இல்லாமல் என் நினைவுகளில் தங்கிவிட்ட சில பெண்களை பற்றி நினைவு படுத்திவிட்டுப் போனது.

என் தோழி அறிமுகப்படுத்திய ஒரு பெண் என்னிடம் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். நான் அறிந்த வெகு சில அழகிகளில் அவளும் ஒருத்தி. ஒரு தீ விபத்தில் அவளது உடல் முழுதும் வெந்திருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். ஒரு பக்கத்து முகத்தில் ஆரம்பித்து அவளது சுடிதாருக்கு மேல் தெரிந்த கழுத்து பகுதி முழுதும் அந்த தீக் காயம். அதை பற்றியெல்லாம் கவலையேபடாமல் சிரித்த முகம் மாறாமல் அவள் பேசிய விதம். அவளது வாழ்க்கையில் அவளது துன்பங்களை தள்ளி வைத்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை ஆரத்தழுவிக்கொண்டு அழகாக சிரிக்கத் தெரிந்த அவள் எனக்கு அத்தனை அழகாகத் தெரிந்தாள். என்னுள் அந்த ஒரு சில நிமிட சந்திப்பில் நிலைத்து நின்றுவிட்டாள். நான் என்னுள் அழகு என்பதற்கு வகுத்த இலக்கனத்திற்கு அவள் எல்லையாகிப் போனாள்.

இப்படி நிறைய பெண்கள் தோற்றத்தால் அல்லாமல் பிற விஷயங்களால் எனக்கு அழகாகத் தோன்றுகிறார்கள். அதுதான் உண்மையான அழகாகவும் எனக்கு தோன்றுகிறது. அப்படி இல்லையேல் நேற்று ஐஸ்வர்யா ராயும் இன்று அமலா பாலும் அழகு என்று போய் கொண்டிருக்க வேண்டியதுதான்.

1 comment:

  1. வாழ்கையை எவ்வாறு வாழத் தொடங்குவது என்பதில் பெரும் குழப்பவாதியாகவே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறேன்.உங்கள் தோழியின் தோழரை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் (அவர் ஆட்சேபிக்காதிருந்தால்) எனது அலைபேசி எண்னை அவரிடம் பகிருங்கள்.நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள் தேவைப்படுகின்றன.

    "துன்பங்களை தள்ளி வைத்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை ஆரத்தழுவிக்கொண்டு அழகாக சிரிக்க.." எததனை பெரிய மனப்பக்குவம் வேண்டும்..

    ReplyDelete