Thursday 8 March 2012

மகளிர்தின வாழ்த்தும் கிடைத்த ஞானமும்

இன்று மார்ச் 08ஆம் தேதி. சர்வதேச மகளிர் தினம் இன்று. சரி எப்போதும் போல் இதுவும் ஒரு விழா நாள். ஹோலிப் பண்டிகையைகூட மறந்து எனக்கு தெரிந்த அனைத்து மகளிர்க்கும் வாழ்த்து சொல்லிவிட வேண்டும் என்ற வேகத்தில் காலையிலேயே ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்த பெண்கள் என்றால் என் குடும்பத்தாரை தவிர்த்து மற்றைய எல்லோரும் இணையத்தில் பழக்கமானவர்கள்தான். அதில் எத்தனை போலியாக பெண் அடையாளத்தில் இருக்கிறார்களோ. நிஜத்தில் பசங்களே நம்மை மதிப்பதில்லை பெண்கள் எங்கே அப்புறம்.

சரி வழக்கம் போல் நான் குடியிருக்கும் ட்விட்டரில் ஆரம்பித்தேன். என் DP யை மகளிர் தினத்தை குறிக்கும் விதத்தில் மாற்றினேன். பிறகு காலையில் முதல் வேளையாக அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என கூறினேன். வழக்கம் போல் ட்விட்டரில் பெண்கள் அனைவரும் மொக்கையில் பிஸியாக இருந்ததால் என் வாழ்த்து கொஞ்சம் பேரையே திரும்பி பார்க்க வைத்தது. அதில் சற்று ஏமாற்றமே. அப்புறம் பேஸ்புக் பக்கம் போய் அழகான ஒரு சிறுமியின் படத்தை போட்டு நாலு வரியில் பெண்களை வாழ்த்தி எழுதி மகளிர் தின வாழ்த்தையும் எனது சுவற்றில் தெரிவித்தேன். குடியிருக்கும் ட்விட்டரை விட அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பேஸ்புக்கில் ரெஸ்பான்ஸ் நன்றாய் இருந்தது.

இதில் கிடைத்த அற்ப சந்தோஷத்திலும், ஏன் ஒரு போன் போட்டு வாழ்த்தகூடாதா என் வரும் திட்டுக்கு பயந்தும் என்னிடம் மொபைல் நம்பர் இருந்த ஒவ்வொரு பெண் நண்பர்களாக அழைத்தேன். அங்கே கிடத்தது ஒரு பெரிய பல்பு. அதன் மூலம் பிறந்தது ஒரு ஞானோதயம். 

முதல் இரண்டு தோழிகளும் வாழ்த்து சொன்னதும் மகிழ்ந்து நன்றி சொன்னார்கள். மூன்றாமவருக்கு நான் வாழ்த்து சொன்னதுதான் தாமதம். என்னடா மாட்டுப் பொங்கல் மாதிரி மகளிர் தின வாழ்த்தா என்றாரே பார்க்கலாம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் முழிப்பதை போனாக இருந்தாலும் சரியாக ஊகித்து கொண்ட அந்த தோழி, சொன்ன விளக்கம் என்னை அசிங்க பட வைத்தது. வருடம் முழுதும் அந்த மாட்டை கஷ்டப்படுத்தி வருத்தி வேலை வாங்குவீங்க. அதுக்கு உடம்புக்கு என்ன சப்பிட்டதா எங்காவது வலிக்குதா, பொதியை சுமக்க முடியுமா என்றெல்லாம் பார்க்காமல் அதை துன்புறுத்திவிட்டு, மாட்டுப் பொங்கலன்று மட்டும் அதை குளிப்பாட்டி, அகங்காரம் செய்து, படையல் போட்டு வேண்டியதை உண்ண கொடுத்து சீராட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றாரே பார்க்கலாம். அவர் சொல்லாமலேயே பெண்களை மற்ற நாட்களில் எவ்வாறு நடத்துகிறோம். இந்த மகளிர் தின நாளில் மட்டும் உயர்த்திப் பிடிக்கிறோம் என்ற குற்றச்சாட்டு புரிந்தது. எல்லா வித சிறப்பு நாட்களுக்கும் இது பொருந்தும் என்று அவரது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் அந்த தோழி.

சமாதானம் ஏதும் சொல்லத் தோன்றாமல் நானும் மொபைலை துண்டித்துவிட்டேன். வைக்கும்போது ஒரு முடிவும் தெளிவுக்கும் வந்தேன். எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் இனிமேல் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவள் எத்தனை முக்கியமானவள், ஸ்பெஷலானவள் என்பது அவள் உணரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என மனதுக்குள் உறுதியெடுத்துக் கொண்டேன். 

உழவில் மாட்டை பயன்படுத்தும் சூழலோ, வீட்டில் பாலுக்கு பசு மாடு வளர்க்கும் சூழலோ வந்தால் கண்டிப்பாக அந்த மாட்டிற்கு தினமும் திருவிழாவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது என முடிவு செய்தது தனி கதை.

4 comments:

  1. அருமை செந்தில் சார்.. //என்னடா மாட்டுப் பொங்கல் மாதிரி மகளிர் தின வாழ்த்தா // சிரம் தாழ்த்தி வணங்குகிரேன்.. who ever she is ..

    ReplyDelete
    Replies
    1. @Ranioye,

      மகிழ்ச்சி... சம்பந்தப்பவரிடம் சொல்லி விடுகிறேன்... :)

      Delete
  2. உண்மை தான்! :( நல்ல பதிவு சார் :)

    ReplyDelete
  3. அனுபவம்.. பலவிதம்.. ஒவ்வொன்றும்.. ஒருவிதம்..

    ReplyDelete