Monday 13 August 2012

சென்னையில் ஒரு மழை நாள்


மனம் எந்த வித டென்ஷனும் இல்லாமல் லேசாக இருக்கையில் தன்னை சுற்றி அனைத்தையும் ரசிக்கிறது. மகிழ்ச்சியாக அனுபவிக்கிறது. மழை தந்த இந்த ரம்மியம், மனதில் முழுதாய் குடிகொண்டிருக்க ஓடி வந்து அந்த ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன் வடபழனி என சொல்லிவிட்டு. எப் எம் மில் காதோரம் லோலாக்கு பாடிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் வெளியே என் கண்களை சுழல விட்டேன். குண்டு பெண்களை அவர்களின் அழகான் சிரிப்பிற்காகவே எனக்கு மிகவும் பிடிக்கும். ஷேர் ஆட்டோவில் இருந்த அந்த குண்டு பெண் என்னை ஓரக் கண்ணால் ஒரு முறை பார்த்தாலும் இன்று நான் இருந்த மனநிலை என்னை வெளியில் பார்க்கச் சொன்னது.

மனசு முழுதும் சந்தோஷத்துடன், நான் எப்போதும் செய்வதுபோல அருகில் இருக்கும் வாகனத்தின் நம்பர்களை கவனிக்க ஆரம்பித்தேன். இது எனது வாடிக்கை. கண்ணில் படும் நம்பர்களை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். முதலில் அது ஒற்றை படை எண்ணா அல்லது இரட்டை படை எண்ணா, பிறகு மூன்றால் வகுக்க முடியுமா, பிறகு அந்த எண்ணில் என்ன விசேஷம் என இப்படியாக என் எண்ணமும் கணக்கும் விரியும். இப்படி பார்த்துக் கொண்டே வருகையில் இன்னமும் நம்பர்கூட எழுதாத புதிய்தாய் வாங்கிய பச்சை நிற டியோ வாகனத்தில் அந்த அழகான பெண்ணும் அவளது ஹெல்மெட்டும் ஏனோ எனக்கு பார்பி பொம்மையைதான் நியாபகப்படுதியது. அவள் அந்த வண்டியில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தது அவளது வனப்புகளை சில கனங்கள் அளவிட வைத்தாலும், மீண்டும் அந்த பார்பியின் நினப்புதான் எனக்கு அவளை பார்க்கையில்.  

முதலில் அந்த தாய்தான் கண்ணில் பட்டாள். இரண்டு சக்கர வாகனத்தில் பின்சீட்டில் உட்கார்ந்துகொண்டு கையில் குழந்தையை வைத்துக் கொண்டும் ஒரு கையால் தலையில் மல்லிகை பூ வைப்பது அவசியமா. அப்படி என்னதான் அவசரமோ என்று திட்டிக்கொண்டேதான் கவனிக்க ஆரம்பித்தேன். அத்தனை சுட்டி அந்த குழந்தை. என்ன ஒரு 2 வயதுதான் இருக்கும். ஒரு 7-8 அடி தள்ளிதான் அந்த வாகனம் நின்றுகொண்டிருந்தது. இருந்தும் அந்த குழந்தை நான் கவனிப்பதை கவனித்துவிட்டான். நான் அவனைத்தான் பார்க்கிறேனா என்ற ச்ந்தேகமா அல்லது நான் என்ன செய்கிறேன் என்று கவனிக்கும் ஆர்வமா தெரியவில்லை என்னை பார்த்தான். நான் வழக்கம் போல சிரித்தேன். அவனும் சிரித்தான். என்னவோ பிகரை மடக்கிய ஆனந்தம் எனக்கு. அந்த குழந்தை என்னை நோக்கி தலையை ஆட்டியது. எனது ஷேர் ஆட்டோவும் அந்த வாகனும் சரியாக நகரத் துவங்கியது. எனக்கும் அந்த குழந்தைக்குமான இந்த உரையாடல் 2 நிமிடம் தொடர்ந்தது. என் மனம் முழுதும் பட்டாம்பூச்சிகளும் வானவில்லும் ஒரே நேரத்தில் அட்டகாசம் செய்தன. அதற்குள் அடுத்த ட்ராபிக் ஜாம். அந்த குழந்தையின் கண் பார்வையை விட்டு நான் அகலும் போது அது யாரயோ தேடிக்கொண்டிருந்தது. அது கண்டிப்பாக நானாகத்தான் இருக்கும். எனது ஷேர் ஆட்டோ ஊர்ந்து கொண்டிருந்த லேனும் அந்த இரண்டு சக்கர வாகனம் இருந்த லேனும் முன்னுக்கும் பின்னுக்குமாக சமமாக நகராததில் மனதிற்குள் நான் என் ஷேர் ஆட்டோ ஓட்டுனரை திட்டிக்கொண்டிருந்தேன். ஷேர் ஆட்டோவில் எப்.எம்மில் நியூஸ் ஆரம்பிச்சாங்க.

அந்த குழந்தையை தோடிக்கொண்டிருந்த போதும், அதன் பார்வையை நான் மீண்டும் இழுக்க முயற்சித்துகொண்டிருந்த போதும் “Jesus Loves You” என கண்ணாடியில் எழுதப்பட்டிருந்த ஆட்டோ குறுக்கே வந்து நின்றது. அதன் ஓட்டுனர் பாவம் என்ன கவலையோ தலை சொறிந்து கொண்டிருந்தார். எங்கோ அவசரமாக போகவேண்டிய கவலையோ அல்லது ஏதோ பணக் கவலையோ அவருக்கு. அவரது கவலையின் பாதிப்பு ஏதுமில்லாமல் பின் சீட்டில் இன்றைய நவீன இளைஞன் தன் ஐபோனை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். ட்விட்ட்ரோ, பேஸ்புக்கோ ஏதோ ஒன்று அவனை ஆட்கொண்டிருந்தது என நினைக்கிறேன். அந்த முகம் வாட்டமும், மகிழ்ச்சியுமாய் மாறி மாறி பிரதிபலித்தது.

ஷேர் ஆட்டோவில் நியூஸ் முடிந்து மெல்ல நலம் வாழ என்னாலும் பாடல் எப்.எம் மில் இசைக்க நான் கண்ட காட்சி என்னையும் அறியாமல் சிரிக்க வைத்துவிட்ட்து. அவசரத்தில் ப்ரேக்கை சரியாக பிடிக்காததால் முன்னே நின்றிருந்த ஒரு பெண்ணின் வாகனத்தில் ஒருத்தர் மோதிவிட்டார். அதை பார்த்த நான் சிரிக்க அதைப் பார்த்து அவரும் சிரிக்க. அந்த நேரம் பார்த்து அந்த பெண் திரும்பி பார்க்க அவருக்கு பயங்கர பல்பு அது. சாரி என்றார் அந்த பெண்ணிடம். ஆனால் அவருக்கு பின்னால் உட்கார்ந்திருந்த அவரது மனைவி இதையெல்லாம் பார்த்து அவரை ஒரு பார்வை பார்த்தாரே அதுதான் ஹைலைட். நான் அவரது நிலையை எண்ணி என்னுள் சிரித்துக்கொண்டேன். அவர் கெஞ்சலாக ஏதோ விளக்கிக்கொடிருந்தார் அவரது மனைவியிடம்.

கோடம்பாக்கம் ப்ரிட்ஜில் ஷேர் ஆட்டோ ஏறும்போது வாகனங்களின் நெருக்கம் அதிகமானது. அடுத்து நின்றிருந்த ஆட்டோவில் மூன்று இளம் பெண்கள். வெளியே பார்த்துக்கொண்டிருந்த என் முகத்திற்கு நேரெதிரே அவர்களின் முகங்கள். கண்டிப்பாக என்னை தவிர்க்க முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. அதில் கடைசியாக இருந்த குண்டு பெண் வழக்கம் போல அவளது சிரிப்பும் அழகு.

மேம்பாலத்தின் மீது வாகனங்கள் மெல்லத்தான் நகர முடிந்தது. அந்த மெதுவான பயணத்தில் பல விஷயங்களை பார்க்க நேர்ந்த்து. சட்டை போட்டுக் கொண்டு கார் ஓட்டி வந்த அந்த பெண் தன் ரியர் மிர்ரரில் யாரையோ தேடிக்கொண்டே வண்டி ஓட்டுவது போலவே எனக்கு தெரிந்தது. எதிரில் வரும் வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சம் அவளது கண்ணில் பளீரிடும் போதெல்லாம் அந்த தேடலை நான் ரசித்தேன். நான் அவளை கவனிப்பதை கவனித்த அவள் முதலில் உதடு கடித்துக் கொண்டாள். இன்று பல பெண்களும் தாங்கள் ஏதாவது ஒரு வகையில் ரசிக்கப்படுவதை விரும்புகின்றனர். எப்.எம்மில் உறுதியான குரலில் நானொரு சிந்து பாடிக்கொண்டிருந்தது. அவளது காரை எதேச்சையாக பார்த்தேன். அவள் காரின் மேல் முழுதும் ஏதோ அட்சதை தூவியது போல மஞ்சள் நிறத்தில் சிறு இலைகள் இறைந்து இருந்தது. அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அயர்ச்சியா என்னவென்று தெரியவில்லை தலையை தன் இருக்கையில் திடீரென்று சாய்த்துக் கொண்டாள். பின் தலையை கைகளில் பொத்தி சோகமான மாதிரி காணப்பட்டாள். இந்த திடீர் மாற்றம் எனக்குள் அவள்மீதும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் ஒரு கரிசனத்தை வரவழைத்தது. எதை மறந்தாளோ தெரியவில்லை, அதற்கு பின் என் கண்ணில் இருந்து மறையும் வரை அவளது முகம் பழைய பொலிவுக்கு திரும்பவில்லை.

இவை மற்றும் இல்லாமல் கிடைத்த கேப்பில் பூந்து பூந்து வண்டி ஓட்டிய அந்த இளைஞன், நான் அவனை பார்ர்கிறேன் என்றவுடன் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே தன் வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான். அப்புறம் மாருதி காருக்குள் இருந்து கொண்டு சாலை தெரியாமல் எட்டி எட்டி பார்த்துக் கொண்டே ஓட்டிய பெண். என் நண்பன் லாரன்சின் அப்பாவை நியாபகப் படுத்திய அந்த வயதானவர். அவர் வாகனம் ஓட்டியதும் அமைதியாய் சுற்றும் முற்றும் பார்த்ததும், அவரது உருவமும் எனக்கு லாரன்சின் அப்பாவை நியாகப்படுத்தின. லாரன்சும் இத்தனை வருடங்களில் அப்படி ஆகியிருக்கலாம்.

நான் சிரித்ததையெல்லாம் என்னோடு ஷேர் ஆட்டோவில் இருந்த அந்த குண்டு பெண் ரசித்ததை சிரித்ததை ஓரக் கண்ணால் நானும் ரசித்தேன்.

1 comment:

  1. Singer Chinmayi mattrum avarathu thaayai asinga padthithiya rendu naaya pathi eppa sir blog elutha poringa.....kedu ketta naaigala, ungalukulam blog oru keda????

    ReplyDelete